பேரையூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கல்குவாரி செயல்பட எதிர்ப்பு ெதரிவித்து பேரையூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தில் 1,300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அருகே அனுமதியில்லாமல் கல்குவாரி செயல்பட்டு வருவதாக கூறி இக்கிராமத்தினர் கல்குவாரியை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.கல்குவாரி அமைப்பதால் கிராமத்தில் உள்ள நீர் ஆதாரம், வெடி வைப்பதால் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிப்படைவதாகவும், விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும் கூறியும், கல்குவாரியை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால் இக்கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரையூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இது குறித்து புகார் மனுவை பேரையூர் தாசில்தாரிடம் கொடுத்தனர்.