இரூர் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை


இரூர் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 10 Jan 2023 1:01 AM IST (Updated: 10 Jan 2023 2:02 AM IST)
t-max-icont-min-icon

இரூர் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, இரூரை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்துக்கு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு சாலை அருகே பெரிய பாலமும், அதன் அருகே 250 மீட்டர் இடைவெளியில் சிறிய பாலமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. பாலங்கள் இரூர் பிரிவு சாலையில் இருந்து சுமார் 250 மீட்டர், 500 மீட்டர் தூரத்திலேயே அமையவுள்ளது. இரூர் கிராமத்தில் தான் தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு புறத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கருவூலம், மகளிர் சுய உதவிக்குழு அலுவலகம் இயங்கி வருகிறது. சாலையின் மேற்கு புறத்தில் இரூர் கிராமம், வங்கிகள், பள்ளிகள், தபால் நிலையம் ஆகியவை உள்ளது. காரை பிரிவு சாலையில் பாலங்கள் அமையபெற்றால், இரூருக்கு வந்து செல்பவர்கள் சாலையின் மேற்கு புறத்திற்கும், கிழக்கு புறத்திற்க்கும் சென்று, வருவதற்கு சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டும். எனவே பொதுமக்களின் நலன் கருதி இரூர் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story