போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் சரிவர இயக்கப்படாததால், ஊட்டி போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

அரசு பஸ் சரிவர இயக்கப்படாததால், ஊட்டி போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நீலகிரி மாவட்டம் முதுகை அடுத்த பெம்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் ஊட்டியில் இருந்து காலை 10 மணி, மாலை 4.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் ஏற்கனவே இயக்கப்பட்ட 2 பஸ்களும் கடந்த 4 மாதமாக சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நேற்று ஊர் தலைவர் கோபி தலைமையில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்குகள் தாக்கும் அபாயம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:-

ஊட்டியில் இருந்து பெம்பட்டிக்கு ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் தான் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பஸ் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. சில நேரங்களில் எங்கள் கிராமத்திற்கு முன்பு இருக்கும் இத்தலார் வரை மட்டும் பஸ் வந்து விட்டு திரும்பி செல்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கரடி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பீதியுடன் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, பெம்பட்டி கிராமத்திற்கு சரியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) மாலை முதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story