கல்குவாரியை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்
வெவ்வயல்பட்டி கல்குவாரியை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்குவாரி
கந்தர்வகோட்டை அருகே வத்தனாக்குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி கிரஷர் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் பரவுவதாகவும், வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாகவும் குடிநீர் மாசு படுவதாகவும் கூறி ஏற்கனவே கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து கல்குவாரி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் குவாரியை மூடுவதாக கூறப்பட்டது.
சாலை மறியல்
இந்நிலையில் அந்தகல்குவாரி தொடர்ந்து இயங்கி வருவதாகவும், இதனை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறி சின்னத்துரை எம்.எல்.ஏ. தலைமையில் அந்த பகுதி கிராமமக்கள் கல்குவாரி முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கீரனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனுமதியின்றி குவாரி இயங்காது என கூறியதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.