தாரமங்கலம் அருகே பரபரப்பு: காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி கண்டுபிடிப்பு


தாரமங்கலம் அருகே பரபரப்பு: காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி கண்டுபிடிப்பு
x

தாரமங்கலம் அருகே காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி கிணறு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

தாரமங்கலம்:

காணாமல் போன கிணறு

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமிரெட்டிபட்டி கிராம மக்களின் குடிநீர் தேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்து வந்தது. நாளடைவில் அந்த கிணறு பயன்பாடு இல்லாமல் போனது. அதனை சிலர் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கிராம மக்கள் காணாமல் போன அந்த கிணற்றை மீட்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கிணறு இருந்த இடம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பெயரில் இருந்தது தெரிய வந்தது.

சாலைமறியல்

அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜம்பு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனை அறிந்து கிணற்றை மூடிய நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தாரமங்கலம்- ஜலகண்டாபுரம் சாலையில் மந்தைதோப்பூர் பகுதியில் திரண்டனர். அங்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றை மீட்டு தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கிணறு கண்டுபிடிப்பு

தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், தாசில்தார் வல்லமுனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் கிணறு மூடப்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். அங்கு வட்ட கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்களிடமும், கிணற்றை மூடிய நபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story