தனியார் கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


தனியார் கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x

கோப்புலிக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

தனியார் கல்குவாரி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அம்மாசத்திரம் கிராமம் கோப்புலிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த கல்குவாரி உரிய அனுமதி இல்லாமல் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், இந்த குவாரியில் வெடிவைத்து தகர்க்கப்படுவதால் அந்த குவாரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி அந்த குவாரியிலிருந்து வெளியாகும் தூசியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதாகவும், குவாரியில் பாறைகளை தகர்க்க வெடி வைக்கும் அதிர்வால் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கரு சிதைவு ஏற்படுகிறது. இந்த குவாரியிலிருந்து பறக்கும் தூசியால் நீர்நிலைகள் மாசடைந்து அந்த நீரை கால்நடைகள் குடிப்பதால் அவற்றிற்கும் நோய் ஏற்பட்டு செத்து வருகிறது.

சாலை மறியல்

இதனால் அந்த கல் குவாரியை மூட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பல்வேறு துறையினரிடம் சென்று தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர். ஆனால் அந்தக் குவாரியை மூட யாரும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று நாம் தமிழர் கட்சியினருடன் இணைந்து அம்மாசத்திரம் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலை தொடர்ந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

மேலும் கிராம மக்களும், நாம் தமிழர் கட்சியினரும் உடனடியாக சம்பந்தப்பட்ட கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரியை மூடுவதாக உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி அவர்கள் மறியலை தொடர்ந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கல்குவாரி குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story