ஜலகண்டாபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் சாலைமறியல்
ஜலகண்டாபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி:
டாஸ்மாக் கடை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பொடையன் தெரு பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்தன. அதற்காக மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு இறக்கும் பணி நடந்தது.
இதனை அறிந்த கிராம மக்கள் ஜலகண்டாபுரம் சின்னப்பம்பட்டி சாலையில் பொடையன் தெரு பகுதியில் இரவு 7.30 மணி அளவில் திரண்டனர். தோரமங்கலம் ஊராட்சி தலைவர் சுந்தரம் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றியக்குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு வரை நீடித்தது
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தினர். மாதர் சங்க நிர்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தாசில்தார் முத்துராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சமாதானம் அடைய கிராம மக்கள் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.