ஆலங்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியல்


ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு விளம்பர பதாகையை சேதப்படுத்தியதால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

விளம்பர பதாகை சேதம்

ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் இதுகுறித்த விளம்பர பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. அப்போது ஒரு தரப்பினர் வைத்திருந்த ஜல்லிக்கட்டு பதாகையை மர்ம ஆசாமிகள் இரவில் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வாராப்பூரை சேர்ந்த மூர்த்தி (வயது 50) என்பவர் மதுபோதையில் மாரியம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பிரிவினர் வைத்திருந்த பதாகையை கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரு பிரிவை சேர்ந்த கிராம மக்கள் விளம்பர பதாகையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மாலை 5 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் குவிப்பு

இதனைதொடர்ந்து புதுக்கோட்டை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இரவு 11 மணி வரை மறியலை கைவிட மறித்து அங்கேயே கூடி உள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story