ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x

குடியாத்தம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

குடியாத்தம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைவர் மீது குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி மன்ற தலைவராக தே.மு.தி.க.வை சேர்ந்த கே.ஆர்.உமாபதி உள்ளார். இந்த ஊராட்சியில் சீவூர், கள்ளூர், முனாப்டிப்போ, லட்சுமணாபுரம், புதுமனை என பல்வேறு கிராமங்கள் உள்ளன. 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி கள்ளூர் கிராமத்தை புறக்கணிப்பதாகவும், அடிப்படை வசதிகளை சரிவர செய்து தரவில்லை, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பதிவு செய்ய பணம் கேட்பதாகவும், இலவச வீடுகள் வழங்குவதற்கு பணம் கேட்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாலை மறியல்

மேலும் ஊராட்சியில் மின்விளக்குகள் எரிவதில்லை, ஊராட்சி மன்ற தலைவரின் கையெழுத்தை பெறச்செல்லும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், கள்ளூர் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை, திடீரென முனாப் டிப்போ பகுதிக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், நீர்நிலைப் பகுதியில் குப்பைகளை கொட்டி உள்ளதை அகற்றி சுத்தம் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் நேற்று காலையில் கள்ளூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு சிலர் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரு பகுதியில் நின்றனர்.

இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன், சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அதை அவர் மறுத்தார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் மீது கூறப்படும் புகார்கள் குறித்து எழுத்து மூலமாக அதிகாரிகளிடம் அளிக்குமாறும், அந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story