சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கபிஸ்தலம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் காலனி தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாளாக சீரமைக்கக்கோரியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில் விசித்திரராஜபுரம் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் வருவாய் துறையினர், போலீஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் 3 மாத காலத்திற்குள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.