பொதுப்பாதை கேட்டு கிராமமக்கள் சாலைமறியல்
வாணியம்பாடி அருகே பொதுப்பாதை கேட்டு, கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணியம்பாடி அருகே பொதுப்பாதை கேட்டு, கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுப்பாதை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் ஊராட்சி, கீழ் வட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு பொது வழி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியினர், அதே பகுதியில் உள்ள தனிநபர் ஒருவரின் விவசாய நிலத்தில் 3 அடி இடத்தை பொது வழியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
தனி நபர், தனது பட்டா நிலத்தில் பொது வழியாக பயன்படுத்துவதற்கு ஈடாக, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நிலத்தின் உரிமையாளரிடம் 9 அடி இடத்தை தண்ணீர் பாச்சுவதற்கு வசதியாக வாங்கித்தருமாறு ஒரு வருடத்திற்கு முன்பு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பொதுமக்கள் வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர், நேற்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஒற்றையடி பாதையாக மாற்றியமைத்துள்ளார்.
சாலை மறியல்
இதனால், நிலத்தின் உரிமையாளரிடம் தகராறு செய்த அப்பகுதியினர் சிலர் பொக்லைன் எந்திரத்தின் கண்ணாடியை உடைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கிராமமக்கள் பொது வழி வேண்டி வாணியம்பாடியில் இருந்து திம்மாம்பேட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீசார் மற்றும் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது வழி ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக வாணியம்பாடி- திம்மாம்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.