தொழிலாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்


தொழிலாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான தொழிலாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வாகையூரை சேர்ந்தவர் மாயவேல் மகன் செந்தில் (வயது 43). மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று ராமநத்தம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் செந்தில் புகுந்து, அங்கிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து அவரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவியின் உடல் சொந்த ஊருக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

வாகையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அந்த வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் வழிமறித்தனர்.

சாலை மறியல்

பின்னர் மாணவி சாவுக்கு காரணமான செந்திலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அல்லது ஜாமினிலில் வெளியே வராத வகையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அங்குள்ள ராமநத்தம்-விருத்தாசலம் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் சீனிபாபு உள்ளிட்டவர்கள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story