குளத்தில் போட்டி ேபாட்டு மீன் பிடித்த கிராம மக்கள்
வடமதுரை அருகே குளத்தில் போட்டி போட்டு கிராம மக்கள் ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.
மீன்பிடித் திருவிழா
வடமதுரை அருகே உள்ள கோம்பையான்பட்டியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அணைக்குளம் உள்ளது. இந்த குளம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் குளத்தில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. அந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகியது. தற்போது குளத்தில் நீர் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை ஊர் பொதுமக்கள் கோம்பையான்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்கு வந்தனர். அங்கு பிரார்த்தனை நடந்தது. அதன்பின்பு அங்கு இருந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து குளக்கரையில் அமைந்திருக்கும் கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
30 கிராம மக்கள் பங்கேற்பு
இதனையடுத்து குளத்தில் இறங்குவதற்கு கிராம மக்கள் கரையோரம் தயாராக நின்றனர். பகல் 12 மணியளவில் ஊர் முக்கியஸ்தர்கள் கொடி அசைத்து மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
மதநல்லிணக்கத்துடன் நடந்த இந்த திருவிழாவில் மடூர், பெரியகோட்டை, ராஜாக்கப்பட்டி, ம.மூ.கோவிலூர் உள்ளிட்ட 30 கிராமங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குடும்பங்களுடன் குளத்தில் இறங்கினர். அவர்கள் வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி போட்டி, போட்டு மீன்களை பிடித்தனர்.
அதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி வகை மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர். மாலை 3 மணி வரை நடந்த மீன்பிடித் திருவிழாவில் அரை கிலோ முதல் 10 கிலோ வரை எடையுள்ள மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த மீன்களை சமைத்து சாப்பிடுவதற்கு வீட்டுக்கு கொண்டு சென்றனர்.