கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்


கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

தேவர்சோலையில் காட்டு யானையை பிடிக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

தேவர்சோலையில் காட்டு யானையை பிடிக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை சுற்றுவட்டார கிராமங்களுக்குள் கடந்த ஒரு மாதமாக காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு யானையை பிடிக்கக்கோரி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள், போலீசார் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்தும் தேவர்சோலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

நாளை (வெள்ளிக்கிழமை) காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வனத்துறை குழுவினர் வர உள்ளதாக தெரிவித்தனர். இதனால் சில மணி நேரம் கழித்து போலீசாரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இருப்பினும், வனத்துறை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் வராததுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து தரப்பினருடன் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

விரட்டும் பணி

இதனிடையே கூடலூர் வனச்சரகர் (பொறுப்பு) யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தேவர்சோலை பகுதியில் புகுந்த 40 வயதான மக்னா யானை மிகவும் சாதுவானது. 4 ஆண்டுகளுக்கு மேலாக செளுக்காடி பகுதியில் வாழ்ந்து வருகிறது. இந்த யானை இதுநாள் வரை பொதுமக்களை தாக்கியதாகவோ அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தியதாகவோ எந்த ஒரு புகாரும் பதிவாகவில்லை. வேண்டுமென்றே வனத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக வீண் வதந்திகளை பரப்பி பொதுமக்களை தூண்டி விட்டு ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்னா யானை 3 இடங்களில் பயிர் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர் வன அலுவலர் உத்தரவின்படி, கடந்த 21-ந் தேதி முதல் மக்னா யானையை முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு விரட்டுவதற்காக தனி குழுவினர் அமைக்கப்பட்டு யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story