குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம்பேட்டை கிராமத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை கண்டித்து அன்று, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
உண்ணாவிரதம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நேற்று அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அன்புசெல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.