பாஞ்சாலங்குறிச்சியில் கிராம மக்கள்கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்


தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரசக்கதேவி கோவில் விழாவுக்கு போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து நேற்று பாஞ்சாலங்குறிச்சியில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

வீரசக்கதேவி கோவில் விழாவுக்கு போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து நேற்று பாஞ்சாலங்குறிச்சியில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

வீரசக்கதேவி கோவில் திருவிழா

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கயத்தாறு, திருச்செந்தூர், கோவில்பட்டி, வைப்பார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துறை நினைவு ஜோதி கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜோதியின் முன்பு வாள் கொண்டு வரக்கூடாது, இருசக்கர வாகனங்கள் பின்னால் அணிவகுத்து வரக்கூடாது, வாகனத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆறுமுகம், சத்தியமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் 9 துணை போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,040 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

கருப்புக்கொடி போராட்டம்

மேலும், குறுக்குசாலை, மணியாச்சி, புதியம்புத்தூர், கீழமுடியமன், ஓட்டப்பிடாரம் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஜோதிக்கு பின்னால் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை கண்டித்து விழாவை நிறுத்துவதாக குழுவினர் தெரிவித்தனர். மேலும் போலீசார் கட்டுப்பாடுகளை கண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கிராமமக்கள் கோட்டை முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வீரச்சக்கதேவி ஆலய குழுவினரிடம் சமாதான பேச்சு வார்த்தை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், தாசில்தார் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், வீரச்செக்கத்தி ஆலைக்குழு தலைவர் முருகபூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 உத்தரவு இருப்பதால் எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி தர முடியாது. இருந்த போதிலும் புகழ்பெற்ற கோவில் திருவிழா என்பதால் ஜோதிக்கு பின்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர் இடைவெளி விட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் செண்டை மேளம் மற்றும் ஒலிபெருக்கிக்கு அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விழா தொடங்கியது

இதனைத் தொடர்ந்து வீரச்சக்கதேவி கோவிலில் திருவிழா கொடியேற்றப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க கனபதிஹோமம் தொடங்கியது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததிய பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story