பள்ளி திறந்த முதல் நாளிலே போராட்டம்தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் முற்றுகைசெஞ்சி அருகே பரபரப்பு
செஞ்சி அருகே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தளவானூரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தேன்மொழி என்பவர் இருந்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து, நேற்று இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
காலையில் வழக்கம் போல் மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போது, கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் நேரில் சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர்.
இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
அப்போது, அவர்கள் அரசு சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, தையல் எந்திரம், மின் மோட்டார் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை தலைமை ஆசிரியர் அபகரித்து விட்டார், எனவே அவரை இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து பள்ளி வழக்கம் போல் இயங்கியது. அதே நேரத்தில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே கிராம மக்களின் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.