மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்திய கிராம மக்கள்


மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்திய கிராம மக்கள்
x

நத்தம் அருகே உலக நன்மை மற்றும் தொடர் மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உலக நன்மை மற்றும் தொடர் மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

அரசமரமும், வேப்ப மரமும்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். விவசாயி. இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பிய கைலாசம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு பொதுவான கோம்பைபட்டி மந்தை பகுதியில் அரச மரக்கன்றை நட்டு வைத்து பராமரித்து வந்தார்.

சில நாட்களிலேயே அரச மரக்கன்றின் அருகிலேயே வேப்ப மரக்கன்றும் தாமாகவே வளர்ந்தது. அரச மரமும், வேப்ப மரமும் அருகருகே வளர்ந்ததால் கிராம மக்கள் அதனை தெய்வங்களாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் வழிப்படுகிறார்கள்.

7 கிராம மக்களுக்கு அழைப்பிதழ்

இந்த நிலையில் உலக நன்மைக்காகவும், தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பாக மரங்களை பராமரித்து வரும் கைலாசத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமுத்திராப்பட்டி, கோம்பைபட்டி, சம்பபட்டி, பூதகுடி, அம்மாபட்டி, சடையன்பட்டி, புதுப்பட்டி ஆகிய 7 கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

வினோத திருமணத்தில் விருந்து

இதனையடுத்து கிராம மக்கள் இன்று காலை கோம்பைபட்டி மந்தை பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்பமரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமணச்சடங்கு நடந்தது.

மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டன. தீபாராதனையை தொடர்ந்து மந்திரங்கள் ஓத, மேள தாளம் முழங்க, கிராம மக்கள் புடைசூழ அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோவில் குருக்கள், வேப்பமரத்துக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். வினோத திருமணத்துக்கு, விருந்தாளிகளாக வந்திருந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story