இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி


இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
x

வடமதுரை அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்

வடமதுரை ஒன்றியத்தில் உள்ள சில கிராமங்களில் ராஜகம்பளத்தார் இனத்தினர் சலகருது என்ற கோவில் காளைகளை வளர்த்து வருகின்றனர். திருவிழாக்களில் மட்டுமே பங்கேற்பதால் இவை சாமி மாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த காளைகள் கோவில் திருவிழாக்களில் இறுதி நிகழ்ச்சியாக நடக்கும் சலகருது ஓட்ட பந்தயங்களில் பங்கேற்கும். சாமி வழிபாடுகளிலும் முக்கியத்துவம் தரப்படும். இந்த வகை காளைகள் அத்திகுளத்துபட்டி, கன்னிமார்பாளையம் உள்பட சில கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்தநிலையில் அத்திகுளத்துபட்டியில் செவலை என்ற 25 வயது உடைய சலகருது என்ற கோவில் காளை இறந்தது. இதனையடுத்து காளையின் உடலை ஊர் மந்தையில் வைத்து மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்காக ஊர் மந்தையில் பந்தல் அமைக்கப்பட்டு, கும்மி, சேர்வையாட்டம், தேவராட்டம், வாணவேடிக்கை என நடத்தி இறுதி சடங்கு செய்தனர். பின்னர் காளை மாட்டின் உடலை சலகருது மாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்தனர்.


Next Story