சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு


சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு
x

சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல்

சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

மலைக்கிராமங்கள்

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமலை உள்ளது. சுற்றுலா தலமாக விளங்கும் சிறுமலை, குட்டி கொடைக்கானல் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுமலையில் பழையூர், புதூர், அண்ணாநகர், வேளாண் பண்ணை, தாளக்கடை, கடம்பன்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வாழை, பலா, எலுமிச்சை, காபி, அவரை, மிளகு, சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

சிறுமலையில் உள்ள மலைக்கிராமங்களில் முறையான சாலை வசதிகள் இல்லை. இதனால் விளைப்பொருட்களை விவசாயிகள் மூட்டைகளாக கட்டி, குதிரைகளில் ஏற்றி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் திண்டுக்கல் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு விளைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

குதிரைகளுக்கு பொங்கல்

இந்தநிலையில் சிறுமலையை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள் மட்டுமின்றி குதிரைகளுக்கும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி சிறுமலை புதூர், பழையூர், அகஸ்தியர்புரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் விவசாயிகள் தங்களது குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதற்கான குதிரைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்கும திலகமிட்டு வழிபட்டனர்.

இதுகுறித்து சிறுமலையை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சிறுமலையில் 300-க்கும் மேற்பட்ட குதிரைகள் உள்ளன. மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் விளைப்பொருட்களை கொண்டு செல்ல குதிரைகள் தான் எங்களுக்கு பேருதவியாக உள்ளன. இதனால் மாட்டுப்பொங்கல் அன்று குதிரைகளை குளிப்பாட்டி, பல்வேறு நிறங்களில் பொட்டு வைத்தும், மாலை அணிவித்து, சலங்கை கட்டி அலங்காரம் செய்வோம். பின்னர் பொங்கல் வைத்து குதிரைகளுக்கு அதை வழங்கி வழிபடுவோம். இது பாரம்பரிய முறைப்படி ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம் என்றனர்.


Next Story