பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் அசத்தல்


பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் அசத்தல்
x

வேடசந்தூர் அருகே 35 ஆண்டுகளுக்கு பிறகு மாடு தாண்டும் திருவிழா நடந்தது. இதில், பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் அசத்தினர்.

திண்டுக்கல்

பாரம்பரிய நடனம்

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் அருகே குடப்பம் கிராமத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கி தாத்தன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் கோவிலில் தீபாராதனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு கோவிலில் இருந்து குண்டம்ம கோடங்கி தாத்தன் சாமிக்கு ஆபரண பெட்டியை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆபரண பெட்டி எடுத்து வரப்பட்டது.

அப்போது தேவராட்டம், சேர்வையாட்டம் போன்ற பாரம்பரிய நடனம் ஆடி கிராம மக்கள் அசத்தினர். கம்புகளை கையில் வைத்து கொண்டும், தலைப்பாகை அணிந்தும் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

'மாலை தாண்டும் திருவிழா'

இதேபோல் கொழுக்கட்டை படையல் வைத்தும், பொங்கல் வைத்து பால் பூஜை செய்தும் பெண்கள் வழிபட்டனர். இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'மாலை தாண்டும் திருவிழா' என்ற காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 14 மந்தைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முன்னதாக தாங்கள் வளர்த்த காளைகளை கொத்துகொம்பு என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து உருமி ஓசை முழங்கியதும், காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாயந்து எல்லைக்கோட்டை நோக்கி காளைகள் ஓடின. எல்லையில் முங்கில் கம்பு மற்றும் வெள்ளைக்கொடியால் தோரண வாசல் கட்டப்பட்டிருந்தது. காளைகள் ஓடி வந்தபோது பொதுமக்கள் கைகளை தட்டி உற்சாக மூட்டினர்.

35 ஆண்டுகளுக்கு பிறகு...

எல்லைக்கோட்டை கடந்த காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி வரவேற்றனர். முதலிடத்தை பிடித்த காளைக்கு பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story