சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்
நத்தம் அருகே, சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே பரளி சுங்கச்சாவடி பகுதியில், மதுரை சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பொடுகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பரளி சுங்கச்சாவடியில் இருந்து இந்த கிராமத்துக்கு செல்ல சாலைவசதி கிடையாது. இதனால் இந்த கிராமம், தனியாக துண்டிக்கப்பட்டதை போல கிராம மக்கள் உணருகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் பயனில்லை.
மறியல்-பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரம் அடைந்த பொடுகம்பட்டி கிராம மக்கள் நேற்று காலை மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் பரளி சுங்கச்சாவடி பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நான்கு வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, பரளிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைத்தாய் தங்கராஜ், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் முத்தையா மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு விரைந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொடுகம்பட்டி கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.