பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் கிராம மக்கள்
கொள்ளிடம் அருகே பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதற்கான தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இதற்கான தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
பழந்தின்னி வவ்வால்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியில் பெரம்பூர் கிராமம் உள்ளது. வயல்வெளிகள் நிறைந்து காணப்படும் இந்த கிராமத்தில் பெரிய ஆலமரம் உள்ளது.
இந்த ஆலமரத்தில் எப்போதும் பறவைகள், பழந்தின்னி வவ்வால்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரத்தில் எப்போதும் பறவைகள் மற்றும் வவ்வால்களின் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.
ஆலமரத்தில் வசித்து வருகின்றன
உலகம் முழுவதும் வவ்வால்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இப்பகுதியில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்கள் ஒவ்வொன்றும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை வரை உள்ளது.
இந்த வவ்வால்களின் உருவங்களைப் பார்த்தால் நரியை போன்ற தோற்றம் இருக்கும்.
இது இரவு நேரங்களில் உணவுக்காக சுமார் 50 கிலோமீட்டர் தூரம் சென்று விட்டு விடிவதற்குள் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆலமரத்திற்கு வந்து விடுகிறது. வவ்வால்களின் எச்சங்கள் விளைநிலங்களில் விழுந்து பயிர்களுக்கு உரமாக பயன்படுகிறது.இதனால் இப்பகுதியில் முப்போக சாகுபடி செய்யப்படுகிறது.
கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்
பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வவ்வால்கள் மூலம் பரவுவதாக தகவல் பரவியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால் இந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பவர் கூறியதாவது:-
குன்னம் கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன.
பட்டாசு வெடிப்பது கிடையாது
மற்ற இடங்களில் இந்த வவ்வால்கள் தங்குவது இல்லை. இதனால் எங்கள் பகுதி கிராம மக்கள் அந்த இடத்தை வவ்வாலடி என்று பெயரிட்டு பாதுகாத்து வருகிறோம். வவ்வால்களை வேட்டையாடுவதை தடுக்க எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வவ்வால்களை பாதுகாப்பதற்காகவும், அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது பெரம்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் பட்டாசு வெடிப்பது கிடையாது.
பசுமையாக காணப்படுகிறது
தற்போது பெரம்பூர் கிராமத்தில் வவ்வாலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆலமரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுந்தாலும் அருகில் உள்ள மரங்களில் தங்கி கொள்கின்றன.
ஆலமரத்தில் தலைகீழாக தொங்கும் வவ்வால்களை பார்க்கவே ஆழகாக காணப்படும். வவ்வால்களின் எச்சத்தால் இப்பகுதியில் செடி, மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது என்றார்.
பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தன் கூறுகையில், இந்த பழந் தின்னி வவ்வால்கள் எங்கள் கிராமத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த இடத்திற்கு வவ்வலாடி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வவ்வால்களை எங்கள் கிராம மக்கள் பாதுகாத்து வருகிறோம். இவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது கிடையாது. இந்த வவ்வால்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.