ஓமலூர் அருகே பரபரப்பு: இறந்தவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம்
ஓமலூர் அருகே இறந்தவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனாகாடு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் யாராவது இறந்தால் அருகில் உள்ள கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோரம் அடக்கம் செய்வது வழக்கம். நைனா காட்டில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதனால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டதுடன், அடிக்கடி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் மனைவி சின்னத்தாயி (வயது80) நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய பாதை அமைத்து தந்தால்தான், உடலை கிராமத்தில் இருந்து எடுப்போம் என்று கூறி அந்த ஊர் மக்கள் கூறினர்.
தகவல் அறிந்த காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொக்லைன் எந்திரம் கொண்டு மயானத்துக்கு செல்லும் பாதை சுமார் 250 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டு நல் நடப்பட்டது. அதன்பிறகு இறந்த மூதாட்டி உடலை பொதுமக்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். அதன்பிறகு அங்கு பரபரப்பு ஓய்ந்தது.