நத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் தர்ணா
நத்தம் அருகே கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே வத்திபட்டியில் இருந்து லிங்கவாடிக்கு செல்லும் சாலையில் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒருதரப்பை சேர்ந்த கிராம மக்கள் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்கள் சாமி கும்பிட அனுமதிக்கக்கோரி நேற்று கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக கிராம மக்களுடனான ஆலோசனை கூட்டம், நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இதுதொடர்பாக பேசி முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் சாமி கும்பிட அனைவரும் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாரேனும் சாமி கும்பிடுவதில் இடையூறு செய்தால் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.