மயானத்துக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டம்
மயானத்துக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டம்
மெலட்டூர்:
அகரமாங்குடி அருகே மயானத்துக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
பாபநாசம் தாலுகா அகரமாங்குடி அருகே தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த கிராம மக்கள் மயானசாலைக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மயானத்துக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் நேற்று மயானத்துக்கு செல்ல சாலைவசதி கேட்டு தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அகரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாஅன்பழகன், துணை தலைவர் வில்லியம் ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்களுக்கான மயானத்திற்கு செல்ல சாலைவசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.