விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்
விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே நூறுநாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாததை கண்டித்தும், வேலையை முறையாக வழங்க கோரியும் நேற்று விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறுநாள் வேலை திட்டம்
விளாத்திகுளம் யூனியனுக்கு உட்பட்ட விருசம்பட்டி ஊராட்சியில், மாமுநயினார்புரம், விருசம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விருசம்பட்டி கிராம மக்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதாகவும், தங்கள் கிராம மக்களை புறக்கணிப்பதாகவும் கூறி கடந்தவாரம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாமுநயினார்புரம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மாமுநயினார்புரம் கிராம மக்களுக்கு இந்த வாரத்திலிருந்து முறையாக 100 நாள் வேலை வழங்குவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
காத்திருப்பு போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த மாமுநயினார்புரம் கிராம மக்கள் நேற்று காலையில் விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முறையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.