கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம்


கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மயானபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அந்த சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயான சாலை ஆக்கிரமிப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து கூசாலிபட்டி கிராமத்தில் அனைத்து சமுதாயமும் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று இறுதி அஞ்சலி செலுத்துவதில் கிராமமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதனால் ஆத்திரமடைந்த கூசாலிபட்டி கிராம மக்கள் நேற்று காலையில் கோவில்பட்டி- கடலையூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் கிராமத்தை சேர்ந்த ஆண், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகா, தாலுகா விநியோக அதிகாரி செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா. இதில், மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1½ மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.


Related Tags :
Next Story