மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
மயானத்துக்கு செல்ல பாதை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயான வழிப்பாதை
வாழப்பாடி அருகே விலாரிபாளையம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மயானத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்த வழிப்பாதையை தனிநபர் அடைத்துவிட்டதாகவும், இதனால் மாற்று வழியில் மயானத்திற்கு செல்ல மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தர்ணா
இந்தநிலையில், மயானத்திற்கு செல்ல பாதை வசதி கேட்டு நேற்று கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். பிறகு மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் தர்ணா போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.