காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டி காலனியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். மேலும் அப்பகுதியில் மேல்நிலை தொட்டி அமைத்தும் 5 ஆண்டுகளாக உப்பு தண்ணீர் தேக்கி வைக்காததால் அரசு பணம் வீணாகுவது குறித்தும் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் நேற்று மதுரை-தேனி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்கள். அதன்பிறகு சாலையோரத்தில் காலிக்குடங்களுடன் நின்று கோஷமிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புத்தாய், ஊராட்சி செயலர் ரஞ்சித்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் முறையான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.