கிராமமக்கள் திடீர் சாலைமறியல்
இடைச்சிவிளையில் கிராமமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தட்டார்மடம்:
இடைச்சிவிளையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை முறையாக நடத்தக்கோரி நேற்று கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கை
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சங்க எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்கள் ஆர்வமுடன் புதிய உறுப்பினராக சேர விண்ணப்பித்து வருகின்றனர். இந்த உறுப்பினர் சேர்க்கை வருகிற 15-ந் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் சிலர் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பபடிவத்தை சங்க நிர்வாகிகள் வாங்க மறுத்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர விண்ணப்ப படிவத்துடன் வந்தனர்.
சாலைமறியல்
அந்த சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வாங்கி பதிவு செய்வதில் காலதாமதம் செய்வதுடன், சேர்க்கையை முறையாக நடத்த வலியுறுத்தி சங்க அலுவலகம் முன்புள்ள திசையன்விளை- தட்டார்மடம் சாலையில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகம்மது ரபீக், நடராஜபிள்ளை, கூட்டுறவு சங்க செயலாளர் டென்சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு
அப்போது கூட்டுறவு சங்க செயலாளர் கூறுகையில், உறுப்பினர் சேர்க்கை முறையாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருவதால் தாமதம் ஏற்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 30 பேர் வீதம் பதிவு செய்து வருகிறோம். தற்போது வந்தவர்கள் அனைவரது விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு பரிசீலனை செய்து முறையாக பதிவு செய்வதாக உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.