பள்ளியில் தூங்கும் போராட்டம் நடத்த கட்டில், பாய், தலையணையுடன் சென்ற கிராம மக்கள்
நிலக்கோட்டை அருகே பள்ளியில் தூங்கும் போராட்டம் நடத்த கட்டில், பாய், தலையணையுடன் கிராம மக்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியில் தூங்கும் போராட்டம்
அரசு கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் உள்ள பள்ளிகளை, பள்ளிக்கல்வி துறையோடு இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி ஊராட்சி சென்னஞ்செட்டிபட்டி கிராம மக்கள், அங்குள்ள அரசு கள்ளர் பள்ளி வளாகத்தில் தூங்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்திருந்தனர். அதன்படி நேற்று மாலை 5.30 மணி அளவில் அங்குள்ள காளி, பகவதி அம்மன் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் கட்டில் பாய், போர்வை தலையணை ஆகியவற்றை வைத்திருந்தனர்.
அரசு கள்ளர் பள்ளிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக கிராம மக்கள் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பு சென்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
பள்ளியில் தூங்கும் போராட்டம் நடத்த முயன்ற சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.