பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்
வடமதுரை அருகே மின்கம்பங்கள் நட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
கம்பிளியம்பட்டியை அடுத்த அக்கரைப்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார கம்பிகள் மூலம் சின்னாம்பட்டி மின்பகிர்மான நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக மின் கம்பங்களும் நட்டு வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் நடப்பட்டு வருகிறது. இதற்கு அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்கம்பங்களை வேறு இடத்தில் நட்டு வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர்.
பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்கம்பத்தை நட்டு வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் கம்பிளியம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமுருகன், ஜெயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வடமதுரை-கம்பிளியம்பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.