அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் மலைக்கிராம மக்கள்


பெரும்பாறை அருகே அடிப்படை வசதிகளுக்காக மலைக்கிராம மக்கள் ஏங்கும் அவல நிலை உள்ளது.

திண்டுக்கல்

உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு இவை மூன்றும் மனிதனின் முக்கிய அத்தியாவசிய தேவைகள் ஆகும். இவை அனைத்தும் கிடைத்தாலே அவனால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். வசதி படைத்தவர்களுக்கு இவை எளிதில் கிடைத்து விடுகின்றன. ஆனால் வசதியில்லாத ஏழை மக்களுக்கு உணவு, உடை கிடைத்தாலும் வீடு என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.

தற்போதைய நிலையில் ஏழை மக்களால் வீடு கட்ட ஒரு சதுர அடி நிலம் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு வீட்டுமனைகளின் விலை உச்சத்தில் உள்ளது. ஏழை மக்களின் இத்தகைய நிலையை அறிந்தே மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.

சிதிலமடைந்து வரும் வீடுகள்

இந்த திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் ஏராளமானோர் பலன் அடைந்தனர். அவர்களின் வாழ்நாள் கனவான சொந்த வீடு கனவும் நிறைவேறியது. ஆனால் தமிழகத்தில் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து தற்போது மக்கள் வசிக்கவே முடியாத நிலையில் உள்ளன.

அந்த வகையில், கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை அருகே நீலாம்பாறை, பூதமலை, கரடிப்பாறை, சுடலைப்பாறை உள்ளிட்ட கீழ்மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதில் நீலாம்பாறையில் 4 வீடுகள், பூதமலையில் 19 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் நீலாம்பாறையில் அமைக்கப்பட்ட 4 வீடுகள், பூதமலையில் 13 வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

தார்ப்பாய்க்குள் தஞ்சம்

கட்டிடங்களின் மேற்கூரை சேதமடைந்ததால் மழைக்காலத்தில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி ஏழை மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு தார்ப்பாய்களை வாங்கி வீடுகளின் மேல் போர்த்திவிட்டு அந்த வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆனாலும் மழைக்காலத்தில் பலத்த காற்று வீசும் போது இந்த தார்ப்பாய்கள் கிழிந்துவிடுகின்றன. அவற்றை அகற்றிவிட்டு புதிய தார்ப்பாய்களை வாங்கி போர்த்த வசதியில்லாததால் கிழிந்த தார்ப்பாய்கள் மீது கற்களை அடுக்கி வைத்து பயன்படுத்தும் நிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, சில தொகுப்பு வீடுகளுக்கு மேற்கூரையே இல்லாமல் உள்ளது. அதற்கும் தார்ப்பாய்களே மேற்கூரையாக இன்றளவும் உள்ளன. இதுதவிர அந்த கிராமத்தில் குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. முறையான சாலை வசதி இல்லை. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை வசதி

வெற்றிவேல் (விவசாய கூலித்தொழிலாளி, நீலாம்பாறை):- ஏழை மக்களின் நலனுக்காக அரசு தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுத்தாலும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அவை மேற்கூரை இல்லாமல் தண்ணீரை சேகரிக்கும் தொட்டிகள் போல் மாறியுள்ளன. இதனால் மழைக்காலங்களில் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். மேற்கூரையாக தார்ப்பாயை பயன்படுத்தினாலும் முழுமையான பாதுகாப்பு இல்லை.

மேலும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால் எங்கள் ஊரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைசிக்காடு என்ற பகுதிக்கு சென்று அங்கிருந்து பஸ்சில் ஒட்டன்சத்திரம் சென்று தான் வாங்கிவர வேண்டும். ஆனால் எங்கள் ஊரில் இருந்து கடைசிக்காடு பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் சாலையில் பரவி கிடக்கின்றன. மழைக்காலங்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாது. ஏனென்றால் ஜல்லிக்கற்கள் அவர்களின் பாதங்களை பதம் பார்த்துவிடும். ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என அனைத்து இடங்களிலும் இந்த பிரச்சினை குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடிநீர் தொட்டி பழுது

நாகலட்சுமி (குடும்ப தலைவி, நீலாம்பாறை):- எங்கள் கிராமத்தில் குடிநீருக்காக வைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த தொட்டியில் குடிநீரை நிரப்பி வைக்க முடியவில்லை. தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போதெல்லாம் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் எங்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. எனவே எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். அதோடு சேதமடைந்த தொகுப்பு வீடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சமாக உள்ளது

சாந்தி (குடும்ப தலைவி, நீலாம்பாறை):- எங்கள் கிராமத்தில் சாலை, குடிநீர், கழிப்பறை, சாக்கடை கால்வாய் என அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. முன்பெல்லாம் காட்டுக்குள் சென்று தேன் எடுத்து வந்து அதனை ஒட்டன்சத்திரம் கொண்டு சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது வனப்பகுதியில் இருந்து தேன் எடுப்பது பெரும் சவாலாக உள்ளது.

எனவே கூலி வேலைக்கு செல்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்கு இன்னும் மின்சார இணைப்பு கூட கிடைக்கவில்லை. தெருவிளக்கு வசதியும் செய்யப்படவில்லை. இரவு நேரத்தில் எங்கள் கிராமம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காட்டுயானை, காட்டெருமை நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் இரவில் வீடுகளைவிட்டு வெளியேறவே அச்சமாக இருக்கிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story