ஏரியில் கழிவுநீர் கலப்பதால் கிராமங்கள் பாதிப்பு
ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜோலார்பேட்டை
ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்துக்கு அருகே உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் பேரூராட்சியின் 15 வார்டுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுகள் வந்து தேங்கி நிற்கிறது.
இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு சுகாதார சீர்கேடு உருவாகிறது. அத்துடன் குளம்போல் தேங்கியிருக்கும் இந்த கழிவுநீர் அருகே நெடுஞ்சாலைக்கு அடியில் உள்ள குழாய் வழியாக ஏரி கால்வாய் வழியாக கடந்து அதிபெரமனூர் பகுதியில் உள்ள கத்தாரி ஏரியில் சென்று கலக்கிறது.
இதனால் அங்குள்ள சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி நிலத்தடி நீரும் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது,. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு விவசாயத்தின் பயனையும் துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த சாக்கடை கழிவுகளை மறுசுழற்சி சுத்திகரிப்பு செய்தோ அல்லது கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.