கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது


கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது
x

கூடலூர் பகுதியில் பலத்த மழையால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் பகுதியில் பலத்த மழையால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முகாமில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல் பகுதிகளில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று காலை ஊருக்குள் மீண்டும் வெள்ளம் புகுந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் விரைந்து வந்து இருவயல் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் 16 பேரை மீட்டு தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளி முகாமில் தங்க வைத்தனர்.

மண் சரிவு

பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி பகுதியில் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி வாலிபர்கள் ஒன்றிணைந்து மழையை பொருட்படுத்தாமல், சாலையில் கிடந்த மண் குவியல்களை அகற்றினர்.

1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதேபோல் கூடலூர் காளம்புழாவில் இருந்து புரமணவயல் செல்லும் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசுவதால் கூடலூர் பகுதியில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் வீரம்மாள் என்பவரது வீட்டின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே தப்பி ஓடியதால் காயம் இன்றி உயிர் தப்பினர். தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

பொன்னாளி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பொன்னானியில் இருந்து பந்தப்பிளா, அம்மன்காவு செல்லும் சாலையில் உள்ள பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story