டாக்டருக்காக காத்திருந்த விழுப்புரம் கலெக்டர்


டாக்டருக்காக காத்திருந்த விழுப்புரம் கலெக்டர்
x

கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டருக்காக காத்திருந்த விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பனங்குப்பம் ஊராட்சியில் ரூ.18½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட பணிகளை ஆய்வுசெய்த கலெக்டர் மோகன் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் ரூ.1.58 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் அதிகளவில் புத்தகங்களை வரவழைத்து நூலகத்தில் வைக்குமாறு பணியார்களை அறிவுறுத்தினார். பின்னர் சின்னபாபுசமுத்திரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.14.37 லட்சம் மதிப்பில் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் விவசாய பணிக்கு ஏற்ப பணியை விரைந்து முடிக்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன் பிறகு கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் மருத்துவர்கள், பணியாளர்கள் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் அங்குள்ள சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு நன்றாக பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது பொதுமக்கள் சிலர், ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் ஒருவர் சரிவர பணிக்கு வருவதில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கலெக்டர் மோகன், அந்த மருத்துவர் வந்த பின்புதான் இங்கிருந்து செல்வேன் என்று கூறியபடி அங்கேயே சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்தார். இருப்பினும் அந்த மருத்துவர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வராததால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story