பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 2 பேருக்கு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 2 பேருக்கு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் கட்டபொம்மன் நகர் பகுதியில் கடந்த 18.9.2021 அன்று விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுரேஷ் மகன் அருண்குமார் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.12,500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 14.11.2021 அன்று கிருஷ்ணாபுரம்- கரையாம்புத்தூர் சாலையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு புதுக்காலனி பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார், தனித்தனி வழக்குகளாக பதிவு செய்து விழுப்புரம் போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கும் உளசார்புள்ள பொருட்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகளில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அருண்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.