விழுப்புரம் தேவநாதசாமி நகர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் தேவநாதசாமி நகரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை தேவநாதசாமி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, அன்று மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, அங்குரார்ப்பணம், வேத திவ்யபிரபந்தம், வாஸ்துசாந்தி ஹோமம், கும்ப ஆவாஹனம் நேற்று முன்தினம் யாகசாலை ஆராதனை, நித்ய ஹோமங்கள், சாற்றுமுறை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், பூர்ணாகுதி, ரக்ஷாபந்தனம், 3-ம்கால யாக சாலை பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
மகா கும்பாபிஷேகம்
இதனை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு புண்யாஹவாசனம், விஸ்வரூப தரிசனம், கோபூஜை, 4-ம்கால யாகசாலை பூஜை, நித்திய ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் நடந்தது. பின்னர் 9.45 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு வேத பாராயணம், பிரபந்த சாற்றுமுறையும், மாலை 6 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாண உற்சவம், சீதா, லட்சுமண, அனுமன் சமேத கோதண்டராமர் திருவீதி புறப்பாடு நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் தேவநாதசாமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.