விழுப்புரம் மாவட்டத்தில்6 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடுகலெக்டர் மோகன் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்6 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடுகலெக்டர் மோகன் தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படுமெனவும் கலெக்டர் மோகன் கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 434 பேர் என மொத்தம் 6,15,454 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. கிராமப்புற ரேஷன் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கும், நகர்ப்புற ரேஷன் கடைகளின் மூலம் 300 டோக்கன்களுக்கும் வருகிற 9.1.2023 முதல் வினியோகம் செய்யப்படும்.

இதற்காக ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வருகிற 3.1.2023 முதல் 8.1.2023 வரை வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

விடுபடாமல் கிடைக்க நடவடிக்கை

மேலும் குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அரசால் சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் விடுபடாமல் அனைவருக்கும் கொண்டு சேர்த்திட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள் யசோதாதேவி, இளஞ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story