பயன்பாடின்றி இருந்து வரும்விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் டவுன்ஹால் அமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பயன்பாடின்றி இருந்து வரும்விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்     டவுன்ஹால் அமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாடின்றி இருந்து வரும் விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் டவுன்ஹால் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் நகராட்சி 1.10.1919-ம் ஆண்டில் உருவானது. பின்னர் 1953-ல் 2-ம் நிலை நகராட்சியாகவும், 1973-ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சிறப்புநிலை நகராட்சி என்ற அந்தஸ்தை விழுப்புரம் பெற்றுள்ளது. நகராட்சி மொத்தம் 42 வார்டுகளை கொண்டதாக உள்ளது.

இந்நிலையில், நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அதன் பிறகு விழுப்புரம் நேருஜி சாலையில் இயங்கி வந்த பழைய நகராட்சி அலுவலகம் முழுமையாக புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதனால் பழைய நகராட்சி அலுவலகம் எந்தவொரு பயன்பாடின்றியும் இருந்து வருகிறது. அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த கணினி வசூல் மையம் மட்டும் செயல்படுகிறது.

தற்போது அந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உபயோகமற்ற பொருட்கள், சேதமடைந்த உபகரணங்களை வைக்கும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்த கட்டிடம் யாருக்கும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

டவுன்ஹால் அமைக்கப்படுமா?

விழுப்புரம் நகராட்சி பகுதியை பொறுத்தவரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்கு நகரில் டவுன்ஹால் போன்ற பொது வளாகம் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். ஏனெனில் விழுப்புரம் நகர பகுதியில் அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவை நடத்துவதற்கு அரசு சார்ந்த பொது வளாகம் என்று எதுவும் இல்லை. இதனால் பல சமயங்களில் அரசு நிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே நகர பகுதியில் பெரியளவில் சமுதாயக்கூடமோ அல்லது கடலூரில் உள்ளதைப்போன்று டவுன்ஹாலோ அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் பெரிய அளவிலான சமுதாயக்கூடமோ அல்லது டவுன்ஹாலோ அமைக்க போதிய இடவசதிகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளது, அதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் லட்சுமணன், தனது தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதில் ஒரு கோரிக்கையாக, விழுப்புரம் நகராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்திக்கொள்ளும் வகையில் அங்கு டவுன்ஹால் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதேபோல் ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்தின்போது அனைத்து நகரமன்ற கவுன்சிலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் நகர மக்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

பயனுள்ளதாக இருக்கும்

இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் தயாபரன் கூறுகையில், விழுப்புரம் நகரத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்வுகள் நடைபெற டவுன்ஹால் போன்றதொரு அரங்கை அமைத்துத்தர வேண்டும்.

விழுப்புரத்தில் பொது தளத்தில் இயங்கி வரும் பல்வேறு இலக்கிய, சமூகநல அமைப்புகள் தங்களின் பணிகளை தொய்வின்றி தொடர இது போன்றதொரு அரங்கம் உதவியாக இருக்கும்.

நகர மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படியொரு அரங்கை நகரின் முக்கிய பகுதியில் அமைத்தால் பொதுமக்கள் அந்த அரங்கை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும். பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் அந்த அரங்கம் அமைந்தால் போக்குவரத்திற்கும் மக்கள் பயன்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நகராட்சிக்கு வருவாய் தரக்கூடியது

விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை மகேஸ்வரி கூறும்போது, விழுப்புரம் நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாறியது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. ஆனால் அதே நேரத்தில் விழுப்புரத்தின் மையப்பகுதியில் உள்ள பழைய நகராட்சி கட்டிடத்தை முடக்கிப்போடாமல் இருப்பது நல்லது.

விழுப்புரம் நகரில் டவுன்ஹால் இல்லாமல் இருப்பது ஒரு பெரும் குறையாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கலை, இலக்கியம், பண்பாட்டு நிகழ்வுகளை விழுப்புரத்தில் நடத்துவதற்கு நகராட்சி ஹால் இல்லாததால் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

ஏற்கனவே விழுப்புரத்திற்கு டவுன்ஹால் வேண்டுமென்று இங்குள்ள மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே நகராட்சியின் பழைய கட்டிடத்தை டவுன்ஹாலாக மாற்றி அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கலை இலக்கிய பண்பாட்டுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஏதுவாக பராமரிக்கப்பட வேண்டும்.

மாநகராட்சிகளில் இருப்பதுபோல் பெரிய வணிக வளாகமாக மாற்றி அதன் தரைத்தளத்தில் நகராட்சியின் டவுன்ஹாலை அமைத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் நகராட்சிக்கும் வருவாய் தரக்கூடியதாக இருக்கும் என்றார்.


Next Story