விழுப்புரம் இயற்கை எழில்மிகுந்த மாவட்டமாக விரைவில் மாறும்
விழுப்புரம் மாவட்டம் இயற்கை எழில்மிகுந்த மாவட்டமாக விரைவில் மாறும் என்று அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் இருந்து ஏனாதிமங்கலம் செல்லும் சாலையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். நா.புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இயற்கை எழில்மிகுந்த மாவட்டமாக
விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் மூலம், விரைவில் இயற்கை எழில்மிகுந்த மாவட்டமாக விழுப்புரம் மாற வாய்ப்புள்ளது. இயற்கை வளத்தை பாதுகாக்க மக்களும் தங்களது வீடுகளில் இருக்கக்கூடிய காலியிடங்களில் பயன் தரக்கூடிய மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, கண்காணிப்பு பொறியாளர் சத்யபிரகாஷ், உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர்கள் வசந்தப்பிரியா, வனிதா, விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.