விநாயகர் சதுர்த்தி பண்டிகை- ஊர்வலம்: இந்து அமைப்புகளுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


விநாயகர் சதுர்த்தி பண்டிகை- ஊர்வலம்: இந்து அமைப்புகளுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
x

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி இந்து அமைப்புகளுடன் போலீஸ் உயரதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, ஊர்வலம் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதில் போலீசார் தனி கவனம் செலுத்தி உள்ளனர்.

எனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அன்பு, இணை கமிஷனர்கள் ராஜேஸ்வரி, ரம்யா பாரதி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். முதலில் இந்து முன்னணி அமைப்பினருடன் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் ஏ.டி.இளங்கோவன், நிர்வாகிகள் மணலி மனோகரன், கார்த்திகேயன் உள்பட 30 பேர் பங்கேற்றனர். அவர்கள், கோர்ட்டு வழங்கிய கருத்தை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை போலீஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

தடையில்லா சான்றிதழ் அவசியம்

இதைத்தொடர்ந்து தமிழக இந்து பரிவார் தலைவர் வசந்தகுமார் ஜி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், பாரத் இந்து முன்னணி பிரபு உள்பட இந்து அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ, அங்கு தான் சிலைகள் வைக்க வேண்டும். புதிய இடங்களில் வைக்க கூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்தரவின்படி குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையிடமும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

தீயணைப்புத்துறை அனுமதியும் அவசியம் ஆகும். மின் இணைப்பும் பிரத்யேகமாக பெற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். இந்த பண்டிகை, ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

தமிழக இந்து பரிவார் கோரிக்கை

ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் தமிழக இந்து பரிவார் தலைவர் வசந்தகுமார் ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

வழக்கமாக வைக்கப்படும் இடங்களில்தான் சிலைகள் நிறுவ வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தால், எங்கு சிலை வைப்பது?. எனவே இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

அதே போன்று மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.25 ஆயிரம் பணம் வரை 'டெபாசிட்' தொகை செலுத்தி மீட்டர் பெறுகிறோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின்னர் அந்த மீட்டரைகொடுத்து 'டெபாசிட்' தொகையை பெறுவதில் நடைமுறை சிக்கல் அதிகம் இருக்கிறது. எனவே இந்த பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

4-ந்தேதி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று நிறுவப்படும் சிலைகள் பூஜிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, பாலவாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story