விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்


விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x
திருப்பூர்


. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகளை பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைத்து வழிபட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. திருப்பூரில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலகுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிற விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இதேபோல் பொதுமக்கள் வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இதற்காக திருப்பூரில் உள்ள பல்வேறு கடைகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்பட மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள பல்வேறு கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அங்கு விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடை உரிமையாளர் கூறியதாவது:- இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமான நவீன வடிவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். விடுமுறை தினமான நேற்று விற்பனை அதிகமாக இருந்தது. அனைவரும் தங்களது நிதிநிலைக்கு ஏற்ற வகையில் ரூ.50 முதல் ரூ.3000 வரை, விதை விநாயகர், வெற்றிலை விநாயகர் உள்பட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் மற்றும் பல்வேறு அமைப்புகளில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story