உறைபனியால் கொடிகள் கருகின:கோத்தகிரியில் மீண்டும் மேரக்காயை பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரம்


உறைபனியால் கொடிகள் கருகின:கோத்தகிரியில் மீண்டும் மேரக்காயை பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் பனிப்பொழிவு மற்றும் வறட்சியின் காரணமாக கருகி, சேதமடைந்த மேரக்காய் கொடிகளை அகற்றி விட்டு, மீண்டும் மேரக்காய் பயிரிடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளார்கள்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பனிப்பொழிவு மற்றும் வறட்சியின் காரணமாக கருகி, சேதமடைந்த மேரக்காய் கொடிகளை அகற்றி விட்டு, மீண்டும் மேரக்காய் பயிரிடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளார்கள்.

மேரக்காய் கொடிகள் கருகின

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், ஓடேன் துறை உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசியதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இதையடுத்து கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் நீர்பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் காரணமாக மேரக்காய் கொடிகள் கருகி சேதமடைந்தன. இதனால் மேரக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டதுடன், விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்பட்டது.

மீண்டும் சாகுபடி

இதனைத் தொடர்ந்து தற்போது பனிப்பொழிவு குறைந்துள்ளதால், விவசாயிகள் தங்களது தோட்டத்தில் சேதமடைந்திருந்த பந்தல்களை அகற்றினர். இதையடுத்து நிலத்தைத் தயார் செய்து, மீண்டும் மேரக்காய்களை பயிரிடும் பணியைத் தொடங்கி உள்ளனர். விதை காய்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்யாமல் இருக்க நடப்பட்ட நாற்றைச் சுற்றி பைகளை வைத்து மறைத்து, பாதுகாத்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக மேரக்காய் கொள்முதல் விலை நிலையாக இருந்து வருகிறது. மேலும் பனிப்பொழிவால் பெரும்பாலான பகுதிகளில் மேரக்காய் கொடிகள் காய்ந்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் தேவை அதிகரித்து வருகிறது. எனவே தற்போது மேரக்காய் பயிரிடும் விவசாயிகளுக்கு வரும் மாதங்களில் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story