தடையை மீறி போராட்டம்: கே.எஸ்.அழகிரி உள்பட 500 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை கண்டித்து வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை கண்டித்து வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரசார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரசார் 500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட அக்கட்சியை சேர்ந்த 500 பேர் மீதும், தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த அமைப்பை சேர்ந்த 40 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.