விதிகளை மீறியவர்கள் மீது வழக்கு
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்ததையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை இதுகுறித்து கூறியதாவது:-
பரமக்குடி நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் முதல்கட்டமாக விதிகளை மீறியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தும் வாகனங்களில் வந்தவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து காயமடைந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.