விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்


விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்
x

குடிபோதையில் ஓட்டியதால் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள், விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரர்களை தாக்கினர்.

கடலூர்

விருத்தாசலம்:

மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூபநாராயணநல்லூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ்(வயது 31). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். இதை விருத்தாசலம் கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் பார்த்தனர்.

உடனடியாக சார்லசின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ், தனது நண்பரான மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவருடன் குடிபோதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

பின்னர் அவர்கள், அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் மோட்டார் சைக்கிளை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், அபராத தொகையை கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்லுமாறு கூறினர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத இருவரும் போக்குவரத்து தலைமை காவலர்கள் முத்துவேலு, முத்துகுமரன் ஆகிய 2 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லசை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஹரிஹரசுதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story