விருதுநகரில் சதம் அடித்த வெயில்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வெயில் சதம் அடித்தது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வெயில் சதம் அடித்தது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சில இடங்களில் அதிகபட்சமாக இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று விருதுநகரில் வெயில் சதம் அடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, நரிக்குடி, தாயில்பட்டி, ஆலங்குளம், தளவாய்புரம், சேத்தூர், திருச்சுழி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன்கோவில், தாணிப்பாறை, மகாராஜபுரம், சாத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் வழக்கத்தை காட்டிலும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
வெறிச்சோடிய சாலைகள்
விருதுநகரில் நேற்று 100.4 டிகிரி பதிவானது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தண்ணீருக்கு தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.
பொதுவாக ஆடி மாதம் பிறந்து விட்டாலே வெயில் குறைந்து விடும் என கூறப்பட்டாலும் தற்போது வெயில் அதிகரித்து வருகிறது. கடும்வெயில் தாக்கத்தின் காரணமாக முக்கியமான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. குளிா்பான கடை, இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகளில் மக்களின் கூட்டம் அலை மோதியது.
குடிநீர் வினியோகம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு சற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கிறது. அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் இன்னும் வினியோக நாட்கள் அதிகரித்து விடுமோ என அஞ்சுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.