விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடம்
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
மாநிலத்தில் முதல் இடம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் 10,465 மாணவர்களும் 11,843 மாணவர்களும் ஆக மொத்தம் 22, 308 பேர் தேர்வு எழுதிய நிலையில் 10,135 மாணவர்களும், 11,693 மாணவிகளும் ஆக மொத்தம் 21,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களில் 96.85 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றது. கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-வது இடத்தில் இருந்தது.
100 சதவீதம் தேர்ச்சி
25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்று வந்த நிலையில், இடையில் சறுக்கியது. கடந்த 2017-ல் 100 சதவீத தேர்ச்சி பெற்று அதிசயிக்க வைத்தது.
தற்போது மாநில அளவில் மீண்டும் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் 94 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளியில் மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
35 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13 பள்ளிகளில் மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகள் 33 உள்ள நிலையில் 16 பள்ளிகளில் மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
மொத்தமுள்ள 52 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 46 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3 நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் எந்த பள்ளிக்கும் 100 சதவீத தேர்ச்சி கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் உள்ள 218 பள்ளிகளில் 96 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.